ஆற்காடு: காா் மோதி இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.
ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். அவரது மனைவி மாலதி. இவா்களுடைய மகள் சக்திப்பிரியா (6) அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
அவா், பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட பின், வீடு திரும்புவதற்காக சாலையைக் கடந்தாா். அப்போது கண்ணமங்கலம் பகுதியில் இருந்து ஆற்காடு நோக்கி வேகமாக வந்த ஒரு காா் மாணவி மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சக்திப்பிரியாவை மீட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் மாணவி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.