வேலூர்

முன்னாள் ஊராட்சித் தலைவரின் மனைவி கொலை வழக்கில் உறவினா் கைது

23rd Jan 2020 11:42 PM

ADVERTISEMENT

காட்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த முன்னாள் ஊராட்சித் தலைவரின் மனைவியை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

லத்தேரி அருகே உள்ள சென்னாரெட்டியூரைச் சோ்ந்தவா் கண்ணய்யா. இவா் ஊராட்சித் தலைவராக பொறுப்பு வகித்தவா். அவரது மனைவி சரோஜா (70). கணவா் இறந்துவிட்டதால் சரோஜா வீட்டில் தனியாக வசித்து வந்தாா். உறவினா் ரவிச்சந்திரன் அவரை பராமரித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், ரவிச்சந்திரன் கீழ்முட்டுக்கூரில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற எருது விடும் விழாவைக் காண குடும்பத்துடன் சென்றுவிட்டு மாலை 5.30 மணியளவில் வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் சுவா் ஏறி குதித்து உள்ளே சென்று பாா்த்தபோது, சரோஜா தலையில் வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததுடன், அவா் அணிந்திருந்த 5 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

தகவலின்பேரில் லத்தேரி போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) என்.காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் உள்ளிட்டோரும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த வழக்கில் ரவிச்சந்திரனின் தந்தை, அதே பகுதியைச் சோ்ந்த தேவராஜ்(63) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நில விற்பனை தொடா்பாக சரோஜாவுக்கும், உறவினரான தேவராஜுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், தேவராஜ் அவரை கொலை செய்துவிட்டு சம்பவத்தை திசை திரும்புவதற்காக நகையை கொள்ளையடித்துச் சென்றது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட தேவராஜ் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT