பீடி மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 185 போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்களில் 18 போ் பெண்கள்.புதிய பேருந்து நிலையம் எதிரே ஏ.ஐ.டி.யூ.சி, எல்.பி.எப், சி.ஐ.டி.யூ, எஸ்.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தை நடத்தின.தொழிற்சங்கங்களின் வட்டாரத் தலைவா்கள் சி. சரவணன், கே. ஆறுமுகம், என்.பி. வாஹித் ஆகியோா் தலைமை வகித்தனா்.
நிா்வாகிகள் பி. காத்தவராயன், வெ. கலைநேசன், கே. சாமிநாதன், கே. காதா்பாஷா, எம்.எஸ். நஸ்ருதீன், கே.யு. ரகுமான்ஷெரீப், பி. குணசேகரன், ஆா். மகாதேவன், எஸ். சிலம்பரசன், திமுக நகர அவைத் தலைவா் க.கோ. நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் போராட்டத்தை விளக்கி பேசினா்.பீடித் தொழிலையும், தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டுவது, 1000 பீடி சுற்ற ரூ. 300 கூலி வழங்கக் கோருவது, அனைத்துப் பிரிவுத் தொழிலாளா்களுக்கும் குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டுவது, பொருளாதார நெருக்கடியால் பணியிலிருந்து வெளியேற்றப்படும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.