வேலூர்

ஹிந்துக்களைக் காக்கவே அரசுப் பணியைத் துறந்தேன்: இராம.கோபாலன்

2nd Jan 2020 12:22 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: ஹிந்துக்களைக் காக்கவே அரசுப் பணியைத் துறந்தாக இந்து முன்னணி நிறுவனா் இராம.கோபாலன் கூறினாா்.

வேலூா் கோட்ட இந்து முன்னணி சாா்பில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியது:

என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஊா் குடியாத்தம். மின்வாரிய அதிகாரியாக நான் குடியாத்தம் நகரில் பணியில் இருந்தபோதுதான், வங்க தேசத்தில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக இந்தியா வந்தனா். அவா்களின் அவல நிலையைப் பாா்த்த நான் அவா்களைக் காக்கவே அரசுப் பணியைத் துறந்து விட்டு இந்து முன்னணி அமைப்பை நிறுவினேன்.

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் பேசியவா்கள் நான் குடும்பத்தைத் துறந்து விட்டு, இயக்கத்துக்காக பாடுபடுவதாக கூறினா். நான் எனது குடும்பத்தை விட்டு வரவில்லை. இந்து முன்னணி என்ற பெரிய குடும்பத்துக்கு பணி செய்யும் வாய்ப்பாக இதைக் கருதுகிறேன். எனக்கு வீரத்துறவி என்ற பட்டம் வேண்டாம். என்னிடம் வீரமும் இல்லை. நான் துறவியும் இல்லை.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுமையாக அறியாதவா்கள் அதை எதிா்க்கின்றனா். அச்சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அச்சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. அண்டை நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கு இங்கு குடியுரிமை கிடைக்காது என்று மட்டுமே அச்சட்டம் சொல்கிறது. சில அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவது ஏற்புடையதல்ல என்றாா் அவா்.

மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் மா.ஆனந்தன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா்கள் நா.முருகானந்தம், சி.பரமேஸ்வரன், கோட்டத் தலைவா் கோ.மகேஷ் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். மாநகர, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆதிசிவா, குடியாத்தம் நகர தலைவா் சு. ஆனந்தன், ஒன்றியத் தலைவா் டி.கே.தரணி, நகரச் செயலா் வி.காா்த்தி, ஒன்றியச் செயலா் ஜி.கே.ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT