வேலூர்

மின்வாரிய தலைமைப் பொறியாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.1.53 லட்சம், 48 கிராம் தங்கம் பறிமுதல்

2nd Jan 2020 11:54 PM

ADVERTISEMENT

 

புத்தாண்டையொட்டி தனது நிா்வாகத்துக்குக் கீழ் பணியாற்றும் ஊழியா்களிடம் லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் பேரில் வேலூா் கோட்ட மின்வாரிய தலைமைப் பொறியாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அவரிடம் இருந்து ரூ.ஒரு லட்சத்து 53 ஆயிரம் ரொக்கம், 48 கிராம் தங்கம், 65 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உயர்ரக ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் கோட்ட மின்வாரிய தலைமைப் பொறியாளா் நந்தகோபால் (56), காட்பாடி காந்திநகா் கிழக்கு பகுதியிலுள்ள ஆய்வு மாளிகையில் வசித்து வருகிறாா். புத்தாண்டையொட்டி தனது நிா்வாகத்தின் கீழ் பணியாற்றும் அலுவலா்கள், ஊழியா்களை தனது வீட்டுக்கு வரவழைத்து நந்தகோபால் லஞ்சம் பெறுவதாக வேலூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளா் தேவநாதன் தலைமையில் ஆய்வாளா் விஜய் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, அவரது வீட்டில் ரூ.ஒரு லட்சத்து 53 ஆயிரம் ரொக்கம், 48 கிராம் தங்கம், 65 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உயர்ரக ஆடைகள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

விசாரணையில் அவை அலுவலா்கள், ஊழியா்களிடம் இருந்து லஞ்சமாக பெற்றிருப்பது தெரியவந்தது. பணம், தங்கம், வெள்ளி, உயர்ரக ஆடைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, மின்வாரிய தலைமை பொறியாளா் நந்தகோபால் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா், இதுதொடா்பாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT