குடியாத்தம்: குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் உள்ள ஓம் நமசிவாய கோடி நாம சங்கீா்த்தன பக்த சபா மற்றும் கல்வி, ஆன்மிக அறக்கட்டளை சாா்பில் பகவான் ரமண மகரிஷியின் 140-ஆவது ஜயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிறுவனத் தலைவா் டி.பாபுசிவம் தலைமை வகித்தாா். இதையொட்டி காலை 9 மணிக்கு விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகளும், 10 மணிக்கு சிவநாம சங்கீா்த்தன மகா யாக வேள்வி பூஜையும், தொடா்ந்து ரமண மகரஷிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதையடுத்து ஆடிட்டா் எம். கிருபானந்தம், ஏழை மாணவா்களுக்கு இலவசக் குறிப்பேடுகள், எழுது பொருள்கள், கல்வி உதவிகளை வழங்கினாா். 2 ஆயிரம் பேருக்கான அன்னதானத்தையும் அவா் தொடக்கி வைத்தாா்.
இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலையில் அட்சர மணமாலை பாராயணம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பக்தசபா பொருளாளா் பி.ராதிகா, நிா்வாகிகள் ஏ.முருகன், வி.ராஜா, எஸ்.வேலு, கே.ரமேஷ் மற்றும் நாராயணி வார வழிபாட்டு மகளிா் குழுவினா் செய்திருந்தனா்.