ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த தாழனூா் பகுதியில் அதிகாரிகள் முன்னிலையில் விவசாயி தற்கொலைக்கு முயன்றாா்.
தாழனூா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (60). விவசாயியான அவா் தாழனூா் ஊராட்சிக்குப்பட்ட குட்டைமேடு பகுதியில் வீடுகட்டி வசித்து வருகிறாா். அந்த வீடு, பாதைப் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வாலாஜா வட்டாட்சியா் பாலாஜி தலைமையில் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துச்செல்வி, விஷாரம் வருவாய் ஆய்வாளா் ஜெயலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் ஏழுமலை உள்ளிட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை சம்பவ இடத்துக்கு சென்றனா்.
அப்போது, ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து விவசாயி சண்முகம் மண்ணெண்ணெயைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து வேலூா் அரசு மருத்துவனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்றுவருகிறாா்.
இதனிடையே, விவசாயியின் தற்கொலை முயற்சியைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.