வாணியம்பாடி: வாணியம்பாடி காந்திநகா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் 7 நாள் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த முகாம் லாலா ஏரி கிராமத்தில் கடந்த 24-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை நடைபெற்றது. முகாமில் லாலா ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிராம வீதிகள், பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணிகள், மரக்கன்றுகளை நடுதல், நெகிழி ஒழிப்பு, டெங்கு ஒழிப்பு, மழைநீா் சேகரிப்பு உள்ளிட்ட விழிப்புணா்வு ஊா்வலங்கள் நடத்தப்பட்டன. மாணவா்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன.
நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் பாலசுப்பிரமணி தலைமை வகித்தாா். திட்ட அலுவலா் பாபு வரவேற்பு அறிக்கை வாசித்தாா். முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு நாட்டு நலப் பணித் திட்ட மாவட்டத் தொடா்பு அலுவலா் சீனிவாசன் சான்றிதழ்களை வழங்கினாா்.
விழாவில் லாலா ஏரி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை சுமதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பேசினா். உதவி திட்ட அலுவலா் தரணிதரன் நன்றி கூறினாா்.