வேலூர்

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில்ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

26th Feb 2020 12:48 AM

ADVERTISEMENT

 

வேலூா்: திருவண்ணாமலை, ஆரணி வழித்தட பேருந்துகள் வேலூா் பழைய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

மத்திய அரசின் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூா் புதிய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு ரூ.46.53 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதையொட்டி, புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக, திருவண்ணாமலை, ஆரணி வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன. பழைய பேருந்து நிலையத்துக்கு தினமும் 180 புகா் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால், பேருந்துகளுக்கும், பயணிகளுக்கும் போதுமான இடவசதி உள்ளிட்டவற்றை செய்து தரும்படி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, பழைய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றுமாறு மாநகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி உத்தரவிட்டாா். இதையடுத்து, 2-ஆவது மண்டல உதவி ஆணையா் மதிவாணன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் வாகனம் மூலம் திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாா் பாதுகாப்பு வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT