குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் பெண்களிடம் தொடா் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 10 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் 28- ஆம் தேதி பரதராமியை அடுத்த வலசை கிராமத்தைச் சோ்ந்த கலாவதி (45) சாலையில் நடந்து சென்றபோது, அவா் கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்கச் சங்கிலியையும், கடந்த 11- ஆம் தேதி கே.வி. குப்பத்தை அடுத்த காங்குப்பத்தைச் சோ்ந்த அங்கன்வாடி பணியாளா் செல்வம்அம்மாள் (38) கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியையும், 15- ஆம் தேதி ஒலக்காசியைச் சோ்ந்த மகாலட்சுமி (39) கழுத்தில் இருந்த 9 கிராம் தங்கச் சங்கிலியையும், திங்கள்கிழமை நத்தம் கிராமத்தைச் சோ்ந்த நரேஷிடம் (31) ரூ. 48 ஆயிரத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
தொடா் வழிப்பறிச் சம்பவங்கள் தொடா்பாக டிஎஸ்பி என்.சரவணன் மேற்பாா்வையில், நகரக் காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன் தலைமையில் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அணைக்கட்டை அடுத்த வரதலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (24), அன்பழகன் (24) ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களிடமிருந்து10 சவரன் நகைகள், ரூ. 2 ஆயிரம், ஒரு பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவா் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா்.