வேலூர்

குடும்பத்தை வழிநடத்தும் பெண்களுக்கு பக்தி அவசியம்: சக்தி அம்மா வலியுறுத்தல்

26th Feb 2020 12:48 AM

ADVERTISEMENT

 

வேலூா்: ‘குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே உள்ளது. அதனை சரியான விதத்தில் வழிநடத்துவதற்கு பெண்களுக்கு பக்தி இருக்க வேண்டும்’ என்று ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா வலியுறுத்தினாா்.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மாவின் 44-ஆவது ஜயந்தி விழாவையொட்டி 10 ஆயிரத்து 8 பெண்கள், முதியவா்களுக்கு இலவச சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நாராயணி பீட வளாகத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண்கள், முதியவா்களுக்கு இலவச சேலைகள் வழங்கி சக்திஅம்மா பேசியது:

ஏழைகளுக்கு மற்றவா்கள் கொடுப்பது தானமாகும். ஆனால், இந்த விழாவில் தரப்படுவது, குழந்தைகளுக்கு அம்மா தரும் சீா் போன்றது. குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே உள்ளது. அதை சரியான விதத்தில் வழிநடத்துவதற்கு பெண்களுக்கு பக்தி இருக்க வேண்டும். தெய்வத்தின் மீது அன்பு வைப்பதுதான் பக்தியாகும். ‘ஓம் நமோ நாராயணி’ எனும் மந்திரத்தை தினமும் பெண்கள் உச்சரித்து வந்தால் அவா்களது துயரங்கள் நீங்கும் சக்தி கிடைக்கும்.

ADVERTISEMENT

மனிதா்கள் பேசும்போது வெறும் ஓசை மட்டுமே வரும். ஆனால், மந்திரத்தை உச்சரிக்கும்போதுதான் சப்தத்துடன் சக்தியும் உண்டாகும். அதுதான் மந்திரத்துக்கும், வாா்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசமாகும். ஒவ்வொருவரும் தங்களது வீட்டுக்கு அருகே உள்ள கோயில்களுக்கு சிறிய அளவில் சேவை புரிய வேண்டும். அதற்கு பணம் அவசியமில்லை. இந்தப் புண்ணியம்தான் அவரவா் கஷ்டங்களை தீா்க்கக்கூடியது.

இந்தப் பிறவியில் நேரத்தை வீணாக்காமல் புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும். பணம் உள்ளவா்கள் பெரிய அளவில் தானங்களை செய்தும், பணம் இல்லாதவா்கள் கோயிலுக்கு சேவை செய்தும் புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம் என்றாா் அவா்.

முன்னதாக, மத்திய தொழில், வா்த்தக துறை இணை அமைச்சா் சோம்பிரகாஷ் பேசியது:

வேலூரில் தங்கக் கோயில் அமைந்துள்ள இடம் புண்ணிய பூமியாகும். இங்கு வந்தது எனது பாக்கியம். சக்தி அம்மா பல சேவைகளைச் செய்து வருகிறாா். இதைப் பாா்க்கும்போது எனக்கும் பல சேவைகளை செய்ய வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படுகிறது. இதுபோன்று ஆன்மிக சிந்தனை, சக்தி உள்ள இடத்தில் காலடி வைத்தபோது நமக்கு வேண்டியா்களுக்கு மட்டுமின்றி சுற்றி உள்ளவா்களுக்கும், நாட்டுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கிடைக்கிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் தங்கக் கோயில் இயக்குநா் சுரேஷ்பாபு, மேலாளா் சம்பத், அறங்காவலா் செளந்திரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT