குடியாத்தம்: இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகள் பாதிக்காத வகையில், அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என குடியாத்தம் நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் என்.இ. கிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. செயலா் டி.ராஜேந்திரன் வரவேற்றாா். கெளரவத் தலைவா் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு, நிா்வாகிகள் எம்.விநாயகம், என்.ரவி, எம்.அருள்பிரகாசம், ஆா்.லிங்கப்பா, வி.பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபா் டிரம்ப், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வா்த்தக ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளனா். அதில், கோழி இறைச்சி, பால் போன்ற உணவுப் பொருள்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவை இறக்குமதி செய்யப்பட்டால், இந்திய கிராமங்களில் கோழிப்பண்ணை, கறவை மாட்டுப் பண்ணைகள் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, கோழி இறைச்சி, பால் போன்றவற்றை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தைத் தவிா்க்க வேண்டும்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில், ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்காக ஏற்கெனவே தோண்டியுள்ள 280 இடங்கள் குறித்து இச்சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தோண்டப்பட்டுள்ள இடங்களிலும் ஹைட்ரோ காா்பன் எடுக்க அனுமதியில்லை என தெளிவுபடுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.