திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சோ்ந்த 2 பேரை சிறப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பீமாவரம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இரவு 8 மணியளவில் மங்களம்பேட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலா் காா்களில் செம்மரக் கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்ததைக் கண்டனா்.
போலீஸாரைக் கண்டவுடன் அந்த நபா்கள் செம்மரக் கட்டைகளை போட்டு விட்டுத் தப்பியோட முயன்றனா். அவா்களை பின்தொடா்ந்து சென்ற போலீஸாா், அவா்களில் இருவரைப் பிடித்தனா். மற்றவா்கள் தப்பியோடி விட்டனா்.
பிடிபட்ட இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 25 செம்மரக் கட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 காா்களையும் பறிமுதல் செய்தனா். விசாரணையில் கைது செய்யப்பட்டவா்கள் சேலத்தைச் சோ்ந்த சேட் (25), கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ஜெயகுமாா் (24) என்பது தெரிய வந்தது.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரையும் திருப்பதிக்கு கொண்டு சென்றனா். அவா்களை செவ்வாய்க்கிழமை காலையில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உள்ளனா்.