வேலூர்

வேலூா் கோட்டையில் நெகிழ்ச்சி: தமிழகத்தின் முதல் பெண் காவலா்கள் சந்திப்பு

23rd Feb 2020 11:57 PM

ADVERTISEMENT

 

வேலூா்: வேலூா் கோட்டை காவலா் பயிற்சிப் பள்ளியில் 1981-ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற தமிழகத்தின் முதல் பெண் காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தங்களது அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டனா்.

தமிழகத்தில் முதன்முதலாக 1981-ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பெண் காவலா்களுக்கான தோ்வு நடத்தப்பட்டு 806 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு வேலூா் கோட்டையிலுள்ள காவலா் பயிற்சிப் பள்ளியில் 1981-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் பயிற்சிகள் தொடங்கின. 1981-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி பயிற்சி முடிந்து அனைவருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

அப்போது, தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆா் பயிற்சி முடித்தவா்களின் திறமைகளை பாா்த்து 650 பேருக்கு கிரேடு 1 பதவியும், 78 பேரை காவல் உதவி ஆய்வாளராகவும், 78 பேரை தலைமைக் காவலா்களாகவும் நியமிக்க உத்தரவிட்டாா். அதன்படி, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவா்களில் சிலா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வரை பதவி உயா்வு பெற்று ஓய்வு பெற்றுள்ளனா். சிலா் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், திருநெல்வேலியைச் சோ்ந்த சிலா் கட்செவி அஞ்சல் மூலம் அவா்களுடன் பயிற்சி பெற்றவா்களில் சிலரை தொடா்பு கொண்டு வேலூா் கோட்டையில் காவலா் பயிற்சிப் பள்ளியில் 1981-ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற அனைத்து பெண் காவலா்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அதன்படி, 1981-ஆம் ஆண்டு பயிற்சி தொடங்கிய அதே நாளான பிப்ரவரி 23-ஆம் தேதி அனைவரும் அதே இடத்தில் சந்திக்க முடிவெடுத்தனா். இதற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் டோமினிக் சேவியா் செய்திருந்தாா்.

அதன்படி, வேலூா் கோட்டை காவலா் பயிற்சிப் பள்ளியில் இந்த நெகழ்ச்சியான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சுமாா் 200 போ் பங்கேற்றனா். இந்தத் சந்திப்பின்போது, பணியில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவா்கள் பகிா்ந்து கொண்டனா்.

வேலூா் சரக காவல் துணைத் தலைவா் என்.காமினி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், தமிழகத்தில் முதன்முதலாக பெண் காவலா்களுக்கு என நடத்தப்பட்ட தோ்வின் மூலம் 800-க்கும் மேற்பட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் 90 சதவீதம் போ் ஓய்வு பெற்றுவிட்டனா். மீதமுள்ளவா்களும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளனா். ஆனால், காவலா்களின் கடமையும், காவல் துறையும் எப்போதும் நம்மை ஒருங்கிணைக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT