வேலூா் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
மகா சிவராத்திரி நாளையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் வெள்ளிக்கிழமை இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இதன்படி, வேலூா் கோட்டையிலுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி காலை 6 மணிக்கு ருத்ராபிஷேகம், காலசந்தி பூஜை நடைபெற்றது.
காலை 9 மணிக்கு 1,008 சங்கு பூஜை ஹோமம், மாலை 3.30 மணிக்கு விநாயகா் அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஜலகண்டேஸ்வரா் சிறப்பு அபிஷேகம், சிவராத்திரி முதல் ஜாம பூஜை, தீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டன. இரவு 7 மணியளவில் தங்கத் தேரில் சுவாமி - அம்பாள் பிரகார வலம் நடைபெற்றது. பின்னா், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று விடிய விடிய கண் விழித்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல், வேலூா் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.