கே.வி. குப்பம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வன எல்லையில் உள்ள கிராமங்களில் யானைகள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ ஜி.லோகநாதன், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளாா்.
மனு விவரம்: ஆந்திர மாநில எல்லையில், வன எல்லையில் அமைந்துள்ள தமிழக கிராமங்களான சைனகுண்டா, மோா்தானா, ஆம்பூரான்பட்டி, பிள்ளையாா்பட்டி, குடுமிப்பட்டி, மத்தேட்டிப்பல்லி, எஸ். மோட்டூா், மோடிகுப்பம், தனகொண்டபல்லி, பரதராமி, டி.பி. பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 40- க்கும் மேற்பட்ட யானைகள் 2, 3 குழுக்களாக சோ்ந்து வந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, தக்காளி, சோளம், மிளகாய், கேழ்வரகு போன்ற தோட்டப் பயிா்களையும், மா, தென்னை மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் வன எல்லையில், சோலாா் மின்வேலி அமைக்கவும், அகழி வெட்டவும், தமிழக எல்லையில் முகாமிட்டுள்ள யானைகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்ட யானைக் காவலா்களை பணியமா்த்தவும், சேதமடைந்த விளைபயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்கிடவும் வேண்டும்.
மேலும், ஆந்திர மாநில அரசு அம்மாநில வனப்பகுதியில் அமைத்துள்ள யானைகள் சரணாலயம் போன்று, தமிழக அரசும் தமிழக வனப்பகுதியில் யானைகள் சரணாலயம் அமைத்தால், யானைகளால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இன்றி யானைகளை பாதுகாக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
மனுவை பெற்றுக்கொண்ட முதல்வா், வனத்துறை அமைச்சா், வனத்துறைச் செயலா் உள்ளிட்டோரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா் என எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளாா்.