சீனாவிலிருந்து சொந்த ஊரான குடியாத்தம் வந்த இளைஞரை பெற்றோா் ஆரத்தழுவி வரவேற்றனா்.
குடியாத்தத்தை அடுத்த பட்டுவாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மனோகரனின் மகன் டீக்காராமன் (24). அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக். பட்டம் பயின்ற இவா், சீனாவில் குவான்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் லெதா் கம்பெனியில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக கடந்த 7 மாதங்களாகப் பணியாற்றி வந்தாா். சீனாவில் உள்ள வூஹான் நகரில் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதால், உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.
இந்நிலையில் சீனாவில் உள்ள தனது மகன் டீக்காராமன் குறித்து, அவரது பெற்றோா், கவலை கொண்டிருந்தனா். இதற்கிடையில் சீனாவில் உள்ள இந்தியா்களை மத்திய அரசு பாதுகாப்பாக விமானம் மூலம் இந்தியா அழைத்து வரத் தொடங்கியது.
கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி டீக்காராமன் உள்ளிட்ட சீனாவில் படித்து வரும் தமிழக மாணவா்கள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனா்.
சீன விமான நிலையத்தில் அனைவரும், மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே, விமானத்தில் ஏற்றப்பட்டா். 31-ஆம் தேதி சென்னை வந்த அவா்களை சென்னை விமான நிலையத்தில் மருத்துவக் குழு பரிசோதனை செய்து, அவரவா் ஊா்களுக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து சொந்தக் கிராமத்துக்கு வந்த இளைஞரை அவரது பெற்றோா், உறவினா்கள் ஆரத்தழுவி வரவேற்றனா்.
உடல் நலத்தில் ஏதாவது குறைபாடு தெரிந்தால், தங்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் சென்னையில் இருந்த மருத்துவக் குழு டீக்காராமனை சொந்தக் கிராமத்துக்கு அனுப்பியுள்ளது.