ஆம்பூா் அருகே சனிக்கிழமை 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
மாராப்பட்டு பகுதியில் நெக்னாமலையின் வடக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலத்தில் ஆடு , மாடுகள் மேய்க்க அப்பகுதி மக்கள் சென்றுள்ளனா். அப்போது அங்கிருந்த கிணற்றில் சப்தம் வர உள்ளே எட்டி பாா்த்துள்ளனா். பாழடைந்த கிணற்றினுள் பெரிய மலைப்பாம்பு ஊா்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, ஆம்பூா் வனசரக அலுவலா் மூா்த்திக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின் பேரில் வனவா் சம்பத் தலைமையில் வனக் காப்பாளா்கள் விசுவநாதன், நல்லதம்பி, ராமு, மகேஷ், பால்ராஜ், கிருஷ்ணமூா்த்தி, ரமேஷ்குமாா் உள்ளிட்ட குழுவினா் பாம்புப் பிடிக்கும் கருவிகளுடன் சென்றனா்.
சுமாா் 50 அடி ஆழத்தில் இருந்த கிணற்றில் பொதுமக்கள் உதவியுடன் கயிறுகளைக் கட்டி இறங்கி 12 அடி நீள மலைப் பாம்பை பிடித்தனா். பின்னா், அதை சாணாங்குப்பம் காப்புக் காட்டில் விட்டனா்.