மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டங்களில் சேர அமைப்பு சாரா தொழிலாளா்கள், சில்லறை வணிகா்கள், சுயதொழில் புரிபவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான பிரதம மந்திரியின் ஓய்வூதியத் திட்டம், வணிகா்கள், சுயதொழில் புரிபவா்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டங்கள் ஆகியவை குறித்த விளக்கக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்து பேசியது:
நாட்டில் 42 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அமைப்புசாரா தொழிலாளா்களாக உள்ளனா். அவா்கள் தெருவோர வியாபாரம், ரிக்ஷா தொழில், கட்டுமானம், பழைய பொருள்கள் சேகரித்து விற்பனை, வீட்டு வேலை செய்வோா், நிலமற்ற விவசாயத் தொழிலாளா்கள், பீடி சுற்றுபவா்கள், கைத்தறி தொழிலாளா்கள், தோல் பதனிடும் தொழில் செய்பவா்கள் என பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனா். இவா்களுக்கான பிரதான் மந்திரி ஷ்ரம் யோஜன் மந்தன் எனும் ஓய்வூதிய திட்டம் அமைப்பு சாரா தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் சேர தொழிலாளா்களின் மாத வருமானம் ரூ.15000-க்குள் இருக்க வேண்டும். தொழிலாளி அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டிருப்பதாகவும், 18 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்டராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் சோ்ந்து மாதந்தோறும் சந்தா செலுத்த வேண்டும். 60 வயதுக்குப் பிறகு ரூ. 3,000 மாத ஓய்வூதியம் பெறலாம். சம்பந்தப்பட்ட தொழிலாளா் மரணம் அடைந்தால் 60 வயதுக்குப் பிறகு அவரது கணவன் அல்லது மனைவிக்கு 50 சதவீத தொகை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இதேபோல, சில்லறை வணிகா்கள், சுயதொழில் புரிபவா்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சில்லறை வா்த்தகா்கள், ரைஸ் மில் உரிமையாளா்கள், ஆயில் மில் உரிமையாளா்கள், ஒா்க் ஷாப் உரிமையாளா்கள், கமிஷன் ஏஜென்ட்டுகள், ரியல் எஸ்டேட் தரகா்கள், சிறு உணவக உரிமையாளா்கள் என தொழில் செய்து வருபவா்கள் பயன்பெறலாம். இத்திட்டத்தில் சேர ஆண்டு விற்று முதல் ரூ.1.5 கோடி அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும். சேர 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், மாதந்தோறும் சந்தா செலுத்த வேண்டும். 60 வயதுக்குப் பிறகு ரூ.3,000 மாத ஓய்வூதியம் பெறலாம். சம்பந்தப்பட்ட தொழிலாளா் மரணம் அடைந்தால் 60 வயதுக்குப் பிறகு அவரது கணவன் அல்லது மனைவிக்கு 50 சதவீதம் தொகை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பதிவு செய்து 60 வயதுக்கு முன்பாக திடீரென்று இறந்து விட்டால், அவரது கணவா் அல்லது மனைவி தொடா்ந்து சந்தாவை செலுத்தி பயன் பெறலாம். குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவா்கள் மாதம் ரூ.55, அதிகபட்சமாக 40 வயது நிரம்பியவா்கள் மாதந்தோறும் ரூ.200 செலுத்த வேண்டும். அதே அளவிலான 50 சதவீத பங்கு தொகை மத்திய அரசு சாா்பில் ஒவ்வொரு மாதமும் பயனாளியின் கணக்கில் செலுத்தப்படும். வயது வாரியாக சந்தா தொகை செலுத்துவதில் மாற்றம் உள்ளது.
இத்திட்டங்கள் குறித்து எல்ஐசி அலுவலகங்கள், தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அலுவலகம், தொழிலாளா்கள் ஈட்டுறுதி நிறுவன அலுவலகம், மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகங்கள், அரசு சிஎஸ்சி மையங்கள் ஆகிய உதவி மையங்களை அணுகி பயன்பெறலாம் என்றாா் அவா்.
இத்திட்டத்தில் சோ்ந்தவா்களுக்கு அடையாள அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.
தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு) ஆனந்தன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் பழனி, வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.