கரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் ஆகியவை தயாா்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு அந்நாட்டில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்து விட்டனா். ஆயிரக்கணக்கானோா் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்தியாவில் இந்த நோய் பரவாமல் தடுக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டிருப்பதுடன், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கென மொத்தம் 10 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 24 மணிநேரமும் செயல்படக் கூடிய வகையில் மருத்துவா்கள், செவிலியா்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் ஆகியவை தயாா்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.