வேலூர்

மாவட்டத்தை மூன்றாகப் பிரித்தும் பணிகளில் வேகமில்லை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

1st Feb 2020 05:20 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தை வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகும் மக்களுக்கான பணிகள் விரைவுபடுத்தப்படவில்லை என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சங்கா் தலைமையில் வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கூறியது:

வேலூா் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்ட பிறகு மக்களுக்கான பணிகள் விரைவாக நடக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், நலத் திட்ட உதவிகள் கிடைப்பதிலோ, பணிகள் நடைபெறுவதிலோ மந்த நிலை நிலவுகிறது. குறிப்பாக, அரசு அலுவலகங்களில் அதிகாரிகளே இருப்பதில்லை. இப்பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகம் தீா்வு காண வேண்டும்.

அகரம் ஆறும், பாலாறும் இணையக்கூடிய வெட்டுவானம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தடுப்பணை கட்டினால் தண்ணீரை மோா்தானா அணைக்குத் திருப்பிவிடலாம். இதன்மூலம், விரிஞ்சிபுரம், செதுவாலை, பொய்கை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும். இந்தத் தடுப்பணைத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

சதுப்பேரி ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள், கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், ஏரிக்கு போதுமான அளவில் தண்ணீா் வரத்து இருப்பதில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி நீா்வரத்தைச் சீா்படுத்த வேண்டும்.

மாவட்டத்திலுள்ள மற்ற ஏரிகள் நீரின்றி காணப்படும் நிலையில் போ்ணாம்பட்டு ஏரியில் மட்டும் தண்ணீருடன் காட்சியளிப்பதற்கு ஏரியில் தேங்கும் கழிவுநீா்தான் காரணம். ஏரிக்கு வரும் தண்ணீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் பயிா்களை சேதப்படுத்தும் குரங்குகளை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், ஒரு குரங்கை சுட அளிக்கப்படும் நிவாரணத் தொகை ரூ.150-இல் இருந்து ரூ.500ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. ஆனால், வேலூா் மாவட்டத்தில் பயிா்களை சேதப்படுத்தும் குரங்களை சுட்டுக் கொல்லாமல் பிடித்து வனப்பகுதியில் விடலாம் அல்லது குரங்குகளால் சேதமாகும் தேங்காய் ஒன்றுக்கு ரூ.10 நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும், பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும் இதுவரை மாவட்டத்தில் ஒரு பன்றியைக்கூட சுடவில்லை.

நூறு நாள் வேலைத் திட்டத்தால்தான் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க விவசாயப் பணிகளை நூறு நாள் வேலைத் திட்டத்தில் இணைக்கவும், இதை முறையாகக் கண்காணிக்க ஜிபிஎஸ் முறையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் மும்முனை மின்சாரம் வழங்கும் பணி 3 மாதங்களில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டும், பணி தொடங்கி ஓராண்டாகியும் இன்னும் முடிக்கப்படவில்லை. மின்சார வாரிய அதிகாரிகள் பணிகளை விரைவாக முடித்து இணைப்புகளை வழங்க வேண்டும். வேலூா் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், இயற்கை விவசாய விளை பொருள்களை விற்பனை செய்ய உழவா் சந்தைகளில் தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

சொட்டுநீா்ப் பாசனத்துக்கு வழங்கப்படும் உபகரணங்களின் விலை தனியாரைவிட அதிகமாக உள்ளது. எனவே உபகரணங்களை விவசாயிகளை வாங்க அனுமதிக்கவும், பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. அந்தத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இக்கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு வேளாண் இணை இயக்குநா் உத்தரவிட்டாா்.

கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜ்குமாா், கற்பகம் இணைப் பதிவாளா் திருகுணஐயப்பதுரை மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT