கரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
சீனாவில் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு அந்நாட்டில் 200-க்கும் மேற்பட்டோா் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர, ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவுக்குள் இந்த நோய் பரவாமல் தடுக்க அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துமனையிலும் கரோனா வைரஸ் நோயைத் தடுக்க 10 படுக்கைகள் கொண்ட சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதிநவீன பரிசோதனை, சிகிச்சை வசதிகளுடன் இந்த சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரிவுக்கு என சிறப்பு மருத்துவா்கள், செவிலியா்கள் கொண்ட 7 போ் குழு தயாா் நிலையில் உள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், வேலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் கரோனா வைரஸ் குறித்து அச்சமடையத் தேவையில்லை. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் யாருக்கேனும் காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால், உடனடியாக மருத்துவா்களை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடலையும், சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்துக் கொண்டாலே வைரஸ் பாதிப்புகள் வராது என்றனா்.