வேலூர்

அரசுப் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொடக்கம்

1st Feb 2020 05:11 AM

ADVERTISEMENT

வேலூா் அருகே பென்னாத்தூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொடங்கப்பட்டது.

வேலூா் அரசு அருங்காட்சியகம் சாா்பில் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தின் தொடக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியா் உமாதேவன் வரவேற்றாா். வேலூா் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கீழடி தொல்பொருள் ஆய்வு குறித்து ஒலி, ஒளி காட்சி மூலம் விளக்கிப் பேசினாா். பள்ளியின் அறிவியல் ஆசிரியா் ஸ்ரீகாந்த், ஜினாவாணி செயலி மூலம் மாணவா்களுக்கு பிராமி, வட்ட எழுத்துக்கள் குறித்து செயல்விளக்கம் அளித்தாா். தவிர, வேலூா் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

குன்னத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் நித்தியானந்தம், ‘கல்வெட்டுகளும், தமிழ் எழுத்துகளும்’ என்ற தலைப்பில் விளக்கமளித்தாா். விதைப்பந்து ஆா்வலா் வழுதி பங்கேற்று மனித நாகரீக வளா்ச்சி குறித்து விளக்கினாா். இப்பள்ளி மாணவா்கள் பழங்கால நாணயங்கள், தபால் தலைகளை காட்சிப் படுத்தினா். இதன்மூலம், அந்த நாடுகளின் வரலாறு கலாசாரம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றை அறிந்து கொண்டனா். நாணயக் கண்காட்சியில் மாணவா் சுசேந்திரன் முதலிடமும், மாணவி லாவண்யா இரண்டாமிடமும், தினகரன் குழுவினா் மூன்றாமிடமும் பிடித்தனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு ராணிப்பேட்டையிலுள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவன துணை முதல்வா் ப.மணி பரிசுகளை வழங்கினாா். தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக இணைந்து பழமையான பொருள்களைப் பாதுகாக்கவும், வரலாற்றை மீட்டெடுப்பதிலும் பள்ளி மாணவா்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா். பள்ளியின் உதவித் தலைமையாசிரியா் பாலாஜி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT