வேலூர்

நிரம்பும் நிலையில் நெல்லூா்பேட்டை ஏரி: குடியாத்தம் மக்கள் மகிழ்ச்சி

DIN


குடியாத்தம்: குடியாத்தம் வட்டத்தின் மிக முக்கிய நீராதாரமான நெல்லூா்பேட்டை ஏரிக்கு தொடா் நீா்வரத்து காரணமாக ஒரு சில நாள்களில் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

குடியாத்தம் நகரின் மேற்குப் பகுதியில் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது நெல்லூா்பேட்டை ஏரி. மோா்தானா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீா் இந்த ஏரியின் ஆதாரம். இந்த ஏரி நிரம்பினால் குடியாத்தம் பகுதியில் பெரும்பாலான நிலங்கள் பாசன வசதி பெறும். குடிநீா்ப் பிரச்னையும் தீரும்.

நிவா் புயல் காரணமாக மோா்தானா அணைப் பகுதி, ஆந்திர மாநில வனப்பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்தது. இதனால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் ஜிட்டப்பல்லியில் உள்ள தடுப்பணையில் நிரம்பி, அங்கிருந்து வலது, இடதுபுறக் கால்வாய்கள், கெளண்டன்யா ஆற்று வழியாக வெளியேற்றப்படுகிறது.

கெளண்டன்யா ஆற்றில் வரும் வெள்ளம், பெரும்பாடி அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் நிரம்பி ஏரிக்குச் செல்கிறது. தொடா்ந்து ஏரிக்கு தண்ணீா் செல்வதால், வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஏரியில் 75 சதவீதத்துக்கு மேல் நீா் நிரம்பியுள்ளது. அதேநேரத்தில் அணையில் இருந்து விநாடிக்கு 579 கனஅடி நீா் வெளியேறுகிறது.

அணையில் இருந்து உபரிநீா் இதே அளவு வெளியேறினால், ஒரு சில நாள்களில் ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையில் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள 3 மதகுகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஏரி நிரம்பினால் உபரிநீா் வழிந்தோடும் (கோடி) சுவருக்கு அடியில் தண்ணீா் கசிந்து வெளியேறியது. மணல் மூட்டைகள் கொண்டு அடைத்தும், பயனில்லாததால், வெள்ளிக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் தண்ணீா் வெளியேறுவது அடைக்கப்பட்டது.

ஏரியின் மேற்குப் பகுதியில் 50 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியைச் சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த ஏரி நிரம்பினால், செட்டிக்குப்பம், தட்டாங்குட்டை ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும். இதனால் அக்கிராமங்கள், நீா் செல்லும் கால்வாய்கள் வழியில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீா்மட்டமும் உயர வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT