வேலூர்

மத்திய அரசு சலுகைகளைப் பெற பால் பதப்படுத்தும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

26th Aug 2020 05:58 PM

ADVERTISEMENT

வேலூா்: மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைப் பெற வேலூா் மாவட்டத்தில் பால் பதப்படுத்தும் தொழிலில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ள, புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் ‘ஆத்ம நிா்பாா் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பாரத பிரதமா் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் 2020-21-ஆம் ஆண்டு முதல் 2024-25-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசின் 60 சதவீதம், மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையின்கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தனிநபா் அடிப்படையில் ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தருதல், வா்த்தக முத்திரை, சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பப் பயிற்சிகள் ஆகியவற்றுக்கு நிதியுதவி செய்யப்படும். உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவைகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும்.

ADVERTISEMENT

ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் வேலூா் மாவட்டத்துக்கு பால் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள, ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறுஉணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியம் பெற்று பயன்பெறலாம். வா்த்தக முத்திரை, சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும். சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை வங்கிகள் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

எனவே, வேலூா் மாவட்டத்தில் பால் பதப்படுத்தும் தொழிலில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ள, புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்று பயன் பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) 94425 80451, வேளாண்மை அலுவலரை 97911 64343 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT