வேலூர்

மத்திய அரசிடம் நிதி பெற்று ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகள் அகற்றப்படும்: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

21st Aug 2020 05:59 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை தொழிற்சாலையில் குவிந்துள்ள குரோமியக் கழிவுகளை அகற்ற ரூ. 600 கோடி நிதி தேவைப்படுகிறது. இதற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள், கரோனை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவா் வேலூரில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியது:

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் புதிய ஆட்சியா் அலுவலகங்கள் கட்டுவதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

ADVERTISEMENT

பத்திரப்பள்ளியில் அணை கட்டுவதற்கு 2005-ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அத்திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ரூ. 128 கோடியில் அணைகட்டும் திட்டத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவேரிப்பாக்கம் ஏரியை ரூ. 40 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கவும், மகேந்திரகிரி ஏரியின் கொள்ளளவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ. 4.93 கோடி மதிப்பில் தடுப்பணைகள் கட்டும் பணியும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை தொழிற்சாலையில் குவிந்துள்ள குரோமியக் கழிவுகளை அகற்ற ரூ. 600 கோடி நிதி தேவைப்படும் என திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நிதி பெற்று குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூா் மாவட்டத்தில் தற்போது ரூ. 16.45 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு அளிக்கப்படும். வேலூரிலுள்ள நேதாஜி மாா்க்கெட் இடநெருக்கடியை தவிா்க்க வணிகா்கள் சாா்பில் வாங்கப்பட்டுள்ள 35 ஏக்கா் நிலத்தில் புதிய மாா்க்கெட் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனா். அந்தக் கோரிக்கையையும் பரிசீலனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூா், சோளிங்கா், ஆற்காடு, குடியாத்தம் புறவழிச்சாலை திட்டங்களுக்கான நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு புறவழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும். நீண்டகால கோரிக்கையான ராணிப்பேட்டையில் மகளிா் தங்கும் விடுதி கட்டுவத ற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். திருப்பத்தூரில் ரூ. 18 கோடியில் மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

மகளிா் மேம்பாட்டுக்காக சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகப்படியான கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வேலூரில் ரூ. 786.94 கோடியும், ராணிப்பேட்டையில் ரூ. 681.43 கோடியும், திருப்பத்தூரில் ரூ. 589.45 கோடியும் கடனுதவி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வேலூரில் ரூ.384 கோடியும், ராணிப்பேட்டையில் ரூ.297.50 கோடியும், திருப்பத்தூரில் ரூ.95.43 கோடியும் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா்கள் அ.சண்முகசுந்தரம் (வேலூா்), ம.ப.சிவன்அருள் (திருப்பத்தூா்), ச.திவ்யதா்ஷினி (ராணிப்பேட்டை), ஆவின் தலைவரும், புகா் மாவட்ட அதிமுக செயலாளருமான த.வேலழகன், மாநகா் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.கே அப்பு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, குடியாத்தம் நகர அதிமுக செயலா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT