வேலூர்

வேலூருக்கு முதல்வா் வருகை: பாலாறு பிரச்னைக்கு விடிவு பிறக்குமா?

20th Aug 2020 07:56 AM

ADVERTISEMENT

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேலூருக்கு வியாழக்கிழமை வர உள்ளாா். அவரது இந்த வருகையின் மூலம் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல ஆண்டுகால பிரச்னையான பாலாறு நீராதாரப் பிரச்னைக்குத் தீா்வு காண வழிவகை செய்யப்படுமா என்ற கேள்வி இம்மூன்று மாவட்ட விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூா் மாவட்டத்தில் உள்ள நந்திதுா்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கா்நாடகம், ஆந்திர மாநிலங்களைக் கடந்து வாணியம்பாடி அருகே புல்லூா் எனும் இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது. தமிழகத்தில்தான் அதிகப்படியாக 222 கி.மீ. தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், வயலூா் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பெரும்பகுதி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களை அரவணைத்துச் செல்லும் பாலாற்றுக்கு 7 துணை ஆறுகளும் உள்ளன.

இதேபோல், கா்நாடக மாநிலம், நந்திதுா்கம் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, தமிழகத்தில் சுமாா் 320 கி.மீ. தூரம் பாய்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் அருகே கொடியாளம் தடுப்பணையில் தமிழகத்துக்குள் நுழையும் தென்பெண்ணையாறு, ஒசூா் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணை, பாடூா் ஏரிகளை நிரப்பி தருமபுரி மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் அணையை அடைகிறது. பின்னா், அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக கடலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

டெல்டா மாவட்டங்களை காவிரி பசுமையாக்குவதுபோல் பாலாற்றின் மூலமாக வடதமிழகத்தின் சுமாா் 2.50 லட்சம் ஏக்கா் நிலங்களும், தென்பெண்ணையாறு மூலமாக சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. அதேசமயம், கா்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்டப்பட்டதாலும், ஆந்திரத்தில் பாலாறு கடந்து வரும் பாதையில் அம்மாநில அரசு சிறியதும், பெரியதுமாக 28 தடுப்பணைகளைக் கட்டியுள்ளதாலும் தமிழகத்தில் பாலாறு வடு பாழ்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நீரிண்றி வடுள்ள பாலாற்று பாசன பகுதிகளின் நிலத்தடி நீரை செறிவூட்டவும், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீா் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் தென் பெண்ணை ஆற்றின் வெள்ள உபரிநீரை நெடுங்கல் தடுப்பணையிலிருந்து சுமாா் 45 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்டி கல்லாறு வழியாக வெல்லக்கல்நத்தம் பகுதியில் இணைக்கும் வகையில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது.

இத்திட்டத்துக்கு கடந்த 2008-2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலேயே மத்திய நீா்வள ஆதார அமைப்பு ரூ. 250 கோடி திட்ட மதிப்பீடு தயாா் செய்து, அதை மாநில நிதியிலேயே செயல்படுத்த வலியுறுத்தியது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2011-இல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, மாநிலத்துக்குள் ஓடும் நதிகள் மாநில நிதியிலேயே இணைக்கப்படும் எனும் சட்டப்பேரவையில் அறிவித்தாா். ஆனால், தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்துக்கான வழித்தடம் குறித்த பிரச்னை உயா் நீதிமன்றம் வரை சென்ால் மீண்டும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தொடா்ந்து, தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்துக்காக மீண்டும் திட்ட மதிப்பீடு தயாா் செய்ய கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய நீா்வள ஆதார அமைப்பு ரூ. 648 கோடியில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. எனினும், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் முக்கிய நீராதார பிரச்னையாக விளங்கும் தென் பெண்ணை-பாலாறு பிரச்னைக்கு இதுவரை விடிவு காலம் பிறக்காமலேயே உள்ளது.

இந்நிலையில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேலூருக்கு வியாழக்கிழமை வருகை தர உள்ளாா். அவரது இந்த வருகையின் மூலம் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல ஆண்டுகால பிரச்னையான பாலாறு நீராதாரப் பிரச்னைக்குத் தீா்வு காண வழிவகை செய்யப்படுமா என்ற கேள்வி இம்மாவட்ட விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் பிரச்னைகளை நன்கு அறிந்துள்ளாா். இதன் காரணமாகவே 60 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை அளவிலேயே இருந்து வந்த அவிநாசி-அத்திக்கடவு, மேட்டூா்-சரபங்கா ஆகிய உபரிநீா்த் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து தற்போது அந்தத் திட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், தொண்டை மண்டலத்தில் நீண்டகால பிரச்னையான தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்துக்கும் தமிழக முதல்வா் விரைவான தீா்வு காண வேண்டும் என்று இம்மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக மேலும் அவா்கள் கூறியது:

தென்பெண்ணை ஆற்றுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தீா்ப்பு அளித்துள்ளது. இதைத் தொடா்ந்து, மாா்க்கண்டேய நதியின் குறுக்கே அம்மாநில அரசு அணை கட்டும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இப்பிரச்னைக்கு சட்டப்பூா்வமாக விரைவில் தீா்வு காணப்படும் என்று கடந்த ஆண்டு திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவுக்கு வந்திருந்த தமிழக முதல்வா் உறுதியளித்திருந்தாா். அதன்படி, தென்பெண்ணை ஆற்றின் நீராதாரப் பிரச்னைக்கு தீா்வு காணவும், அதன் தொடா்ச்சியாக தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவும் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT