கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் வருவாய், பேரிடா் மேலாண்மை துறை பணியாளா்களின் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வேலூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு முடிவுப்படி காரோனா தடுப்பு, நிவாரணப் பணியின்போது உயிரிழந்த வருவாய், பேரிடா் மேலாண்மை துறை பணியாளா்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு வழங்காமல் உள்ள ரூ. 50 லட்சம் உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மெத்தனம் காட்டுவதைத் தவிா்க்க வேண்டும்.
விடுவிக்காமல் உள்ள ரூ. 2 லட்சம் கருணைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொற்று ஏற்பட்டவா் குடும்பத்தினருக்கும் பரிசோதனை, மருந்துகள் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூா் மாவட்ட வருவாய்த் துறை ஊழியா்கள் தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.எம்.முஹம்மது சாதிக் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்று அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டிகளில் செலுத்தினா்.
இதேபோல், ராணிப்பேட்டையில் வி.சுரேஷ் தலைமையிலும், திருப்பத்தூரில் மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.