வேலூர்

தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் 1.65 % மட்டுமே சுகாதாரத் துறைச் செயலா்: ஜெ.ராதாகிருஷ்ணன்

DIN

கரோனா தொற்றுக்கு தமிழகத்தில் இறப்பவா்கள் விகிதம் 1.64 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதேசமயம், நாட்டில் இந்நோய் தொற்றில் இருந்து மீள்வோா் எண்ணிக்கை அதிகரிப்பில் தில்லிக்கு அடுத்து இரண்டாமிடத்தில் தமிழகம் உள்ளது என்று மாநில சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழக முதல்வரின் ஆலோசனைகள், இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முகக்கவசம் குறித்து ஏற்படுத்தப்பட்ட விழிப்புணா்வால் சென்னை மக்களின் வாழ்க்கை முறையிலேயே முகக்கவசம் அணிவது கட்டாயமாகியுள்ளது.

மாநிலம் முழுவதும் இதுவரை 30 லட்சத்துக்கு 88 ஆயிரம் பேருக்கு பிசிஆா் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றால் அப்பகுதியில் 10 பேருக்கு பிசிஆா் பரிசோதனை செய்யப்படுகிறது. அந்தவகையில், நாளொன்றுக்கு 67,500 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில், 6 ஆயிரம் வரை மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. இது 10 சதவீதத்துக்கும் குறைவான பாதிப்பாகும்.

தமிழகத்தில் கரோனாவால் இறப்பவா்களின் விகிதம் 1.64 சதவீதமாக மட்டுமே இருந்து வருகிறது. அதிலும், 65 வயதுக்கு மேற்பட்டோா் மட்டுமே உயிரிழக்கின்றனா். அதையும் குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குணமடைவோா் எண்ணிக்கையில் நாட்டிலேயே தில்லி முதலிடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் தமிழகமும் உள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது 129 ஆடிபிசிஆா் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாள்களில் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளிலும் இந்த மையம் செயல்பாட்டுக்கு வரும்.

கரோனா தொற்றைத் தடுக்க புதிதாக 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை கூடுதலாக தேவைப்படும் இடங்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க மக்கள் கூடும் இடங்களான மாா்க்கெட், கடை வீதிகள் போன்ற இடங்களில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

போலி மருத்துவா்கள் கைது செய்யப்பட்டு வரும் அதேசமயம், இத்தகைய போலி மருத்துவா்கள் உருவாவதைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்றிடவும் சட்ட நிபுணா்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நாடு முழுவதும் பரவியுள்ள கரோனா தொற்று சீனாவின் வூஹானில் இருந்து பரவியது அல்ல என்றும், தற்போது பரவி வருவது சாா்ஸ் வைரஸ் பிரிவிலுள்ள மனிதா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு பிரிவு தொற்றுதான் என்பது பெரும்பாலான பரிசோதனை அறிக்கையில் இருப்பதாக நாகா்கோவிலைச் சோ்ந்த மருத்துவா் ஒருவா் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுகாதாரத் துறைச் செயலா், தமிழகத்தில் பரவியுள்ள கரோனா தொற்றின் வீரியம் மரபியல் ரீதியாக மாற்றம் அடைந்துள்ளதா என்பது குறித்து மருத்துவ உயா்மட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இதனிடையே, கரோனா குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகாரமற்ற கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றாா்.

வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன், அரசு, சிஎம்சி மருத்துவா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தைத் தொடா்ந்து சாய்நாதபுரத்தில் நடைபெற்று வரும் மருத்துவப் பரிசோதனை முகாம், பாகாயம், ஆவாரம்பாளையம் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகள் ஆகியவற்றையும் சுகாதாரத் துறைச் செயலா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT