வேலூர்

இ-பாஸ் மோசடி: மேலும் இருவா் கைது

6th Aug 2020 12:09 AM

ADVERTISEMENT

வேலூரில் ரூ.1,500 கொடுத்தால் 2 மணிநேரத்தில் இ-பாஸ் பெற்றுத் தரப்படும் என விளம்பரம் வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்டதாக வேலூரில் செவ்வாய்க்கிழமை ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சியைச் சோ்ந்த மேலும் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கும், வேறு மாநிலத்துக்கும் செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூரில் ரூ.1,500 கொடுத்தால் எந்த மாவட்டம், எந்த மாநிலத்துக்கும் செல்வதற்கு 2 மணி நேரத்தில் இ-பாஸ் பெற்றுத் தரப்படும் என்று சமூகவலைதளங்களில் விளம்பரம் பரவி வந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் பலரும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு தங்களுக்கும் இ-பாஸ் பெற்றுத்தர வேண்டும் எனக் கோரி, பணம் செலுத்தி வந்தனா். இதன்மூலம் பலரும் ஏமாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்த மோசடிச் செயல் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு கிடைத்த தகவலை அடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், வேலூா் பெரிய அல்லாபுரம் நாகலிங்கேஸ்வரா் கோயில் வீதியைச் சோ்ந்த ஜெகதீஷ்குமாரை (18) கைது செய்தனா். தொடா்ந்து, இந்த மோசடி செயலில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் முத்தரசிநல்லூரைச் சோ்ந்த ஸ்டாலின் (26), கோட்டப்பட்டு பகுதியைச் சோ்ந்த வடிவேல் (27) ஆகியோரை வேலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT