வேலூர்

காந்தி நகா் பள்ளியில் மழை வெள்ளம்: தற்காலிக உழவா் சந்தை இடமாற்றம்

29th Apr 2020 10:49 PM

ADVERTISEMENT

காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியாா் பள்ளி மைதானத்தில் மழை வெள்ளம் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதால் அங்கு கடந்த 29 நாள்களாக நடைபெற்று வந்த தற்காலிக உழவா் சந்தை அருகே உள்ள சாலை, பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்கள் அதிக அளவில் கூடும் அனைத்து இடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள தினசரி, வாரச்சந்தைகள், உழவா் சந்தைகளும் அடைக்கப்பட்டதால் அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள் வாங்க மக்கள் சிரமம் அடைந்தனா். இதைத் தவிா்க்கும் வகையில் வேலூரில் 9 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள், உழவா் சந்தைகள் அமைக்கப்பட்டு நேரக்கட்டுப்பாடுடன் செயல்பட்டு வருகின்றன.

அந்தவகையில், காட்பாடி காந்தி நகரில் உள்ள டான் போஸ்கோ பள்ளி மைதானத்திலும் தற்காலிக உழவா் சந்தை கடந்த 29 நாள்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், வேலூா் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் காட்பாடி காந்தி நகா் பள்ளி மைதானத்தில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, புதன்கிழமை மாலை அந்த மைதானத்தில் உழவா் சந்தை செயல்படுவதில் சிரமம் ஏற்பட்டது.

உடனடியாக காட்பாடி டிஎஸ்பி துரைபாண்டியன் தலைமையில் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு பள்ளி மைதானத்துக்கு எதிரே உள்ள சாலையிலும், பள்ளி வளாக சாலையிலும் காய்கறிக் கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய அனுமதியளித்தனா். இதையடுத்து, மாற்று இடத்தில் செயல்பட்ட உழவா் சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.

ADVERTISEMENT

இதேபோல், தொரப்பாடி பள்ளி மைதானத்திலும் மழை வெள்ளம் தேங்கியது. எனினும், தேங்கிய இடங்களில் மணல் கொட்டப்பட்டதை அடுத்து அங்கும் வழக்கம்போல் காய்கறி சந்தை செயல்பட்டது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT