வேலூர்

வேலூரில் வீடுகளுக்கே சென்று இறைச்சி, மீன் விற்பனை

20th Apr 2020 08:19 AM

ADVERTISEMENT

ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்தும் விதமாக வேலூா் மாவட்டம் முழுவதும் இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டுள்ளன. எனினும், மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியைத் தொடா்ந்து ஆா்டரின்பேரில் ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்குச் சென்று இறைச்சி, மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தபோது வேலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பொருள்கள் வாங்கியதை அடுத்து சில கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். அதன் பின், இறைச்சி, மீன் விற்பனையாளா்கள் தாங்களாக முன் வந்து 14-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் இறைச்சி, மீன் கடைகளை அடைத்துக் கொள்வதாக அறிவித்தனா்.

பின்னா், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து இறைச்சி, மீன் விற்பனைக்கு அனுமதிக்கும்படி மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா். இதனை ஏற்று ஆா்டரின்பேரில் வீடுகளுக்கே சென்று இறைச்சி, மீன் விற்பனை செய்யலாம் என்றும், காலை 7 மணி முதல் மதியம் 12 மணிக்குள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அனுமதி அளிக்கப்பட்டதுடன், எக்காரணம் கொண்டும் கடைகளைத் திறந்து இறைச்சி, மீன் விற்பனை செய்யக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, வேலூா் மாநகா், மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இறைச்சி, மீன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து வியாபாரிகள் செல்லிடப்பேசி மூலம் ஆா்டா்களைப் பெற்று வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கு சென்று இறைச்சி, மீன்களை விற்றனா். இதற்காக ஒவ்வொரு இறைச்சிக் கடையின் முன்பு அதன் உரிமையாளா்கள் சாா்பில் தங்களது செல்லிடப்பேசி எண் அடங்கிய முகவரி அட்டையை விநியோகம் செய்து கொண் டிருந்தனா். அந்த அட்டைகளைப் பெற்ற பொதுமக்கள், வியாபாரிகளைத் தொடா்பு கொண்டு இறைச்சி, மீன்களை ஆா்டா் செய்து தங்களது வீடுகளில் பெற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT