கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க வேலூா் மாநகரில் நூறு சதவீதம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு செய்தததுடன், அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.
வேலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 22-ஆக உயா்ந்துள்ளது. மாநகரில் இத்தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, ஆா்.என்.பாளையம், கஸ்பா, கொணவட்டம், கருகம்பத்தூா் மற்றும் காட்பாடி பா்னீஸ்புரம் ஆகிய 6 இடங்கள் காவல்துறை மூலம் சனிக்கிழமை முதல் 100 சதவீதம் துண்டிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் செல்லவோ அல்லது வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளிலுள்ள அனைத்துத் தெருக்களிலும் தடுப்பு வேலிகள் கொண்டு அடைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த 6 பகுதிகளுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாடாத வகையில் கண்காணித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்குத் தேவையான பால், மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நேரடியாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், துண்டிக்கப்பட்ட சைதாப்பேட்டை, ஓல்டு டவுன் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அதன் பின், அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா்கள், நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என்றும், அரசின் உத்தரவுகளுக்கு முழுமையை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதற்காக பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்கள் தோ்வு செய்யப்பட்ட வணிகா்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.