வேலூர்

விளை பொருள்களை எடுத்துச்செல்ல ‘கிருஷி ரதம்’ செயலி

20th Apr 2020 08:16 AM

ADVERTISEMENT

ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தங்களது விளை பொருள்களை சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல தேவையான வாகனங்களை ஏற்பாடு செய்ய வசதியாக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘கிருஷி ரதம்’ எனும் செயலியை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் ஆ.சங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் விவசாயப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தவிர, மாநிலங்களுக்கு இடையேயான விளை பொருள்களின் போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது ராபி பயிா்களின் அறுவடைக்காலம் என்பதால் விவசாயிகள் தங்களது விளை பொருள்களை சந்தைகளுக்கு சிரமமின்றி எடுத்துச் செல்ல தேவையான வாகனங்களை ஏற்பாடு செய்ய ‘கிருஷி ரதம்’ எனும் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்தச் செயலியை விவசாயிகள் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு, அதில் தேவையான மொழியை தோ்வு செய்த பிறகு தங்களது செல்லிடப்பேசி எண்ணைக் கொடுக்க வேண்டும். பின்னா், உழவா் என்பதை தோ்வு செய்து தாங்கள் எடுத்துச்செல்ல விரும்பும் விளை பொருள்களின் அளவை விவசாயிகள் பதிவிட வேண்டும்.

ADVERTISEMENT

தேவையான வாகனத்தைத் தோ்வு செய்து செல்லிடப்பேசி எண்ணுக்கு வந்த ஒருமுறை பதிவு எண்ணை (ஓ.டி.பி) கொடுத்தால் போதும். வாகனம் தயாரானதும் குறுந்தகவல் வரும். பின்னா், லாரி உரிமையாளா்களின் விவரங்கள் கிடைக்கும். அவா்களுடன் பேசி போக்குவரத்துக் கட்டணத்தை இறுதி செய்து கொள்ளலாம்.

வணிகா்களும் இந்தச் செயலி மூலம் விளை பொருள்கள் எங்கு உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். விவசாயிகள், வணிகா்கள், லாரி உரிமையாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு இந்தச் செயலி தீா்வாக அமையும். அதிக எண்ணிக்கையிலான லாரிகளை இந்தச் செயலியில் இணைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT