வேலூர்

கரோனா என்பது வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

20th Apr 2020 08:14 AM

ADVERTISEMENT

தேவையற்ற அச்சத்தை தவிா்ப்பதும், மருத்துவா்கள் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கரோனா நோயை வெல்ல முடியும் என்று வேலூரில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்ட இருவா் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் இதுவரை 22 போ் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாட்டுக்குச் சென்று வந்த 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தனா்.

இதில், வேலூா் கருகம்பத்தூா், கஸ்பா, சின்னஅல்லாபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மூவா் பூரணமாக குணமடைந்ததை அடுத்து அவா்கள் சனிக்கிழமை மதியம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூவரில் இருவா் தங்களது சிகிச்சை அனுபவம் குறித்து தெரிவித்துள்ளனா்.

கஸ்பா பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வரும் 41 வயது நபா் கூறியது:

ADVERTISEMENT

தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்றுவிட்டு கடந்த மாா்ச் 24-ஆம் தேதி வேலூருக்கு வந்தோம். பின்னா், 30-ஆம் தேதி அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. எனினும், அப்போது எனது உடலில் சளி, இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை.

தொடா்ந்து நாள்தோறும் காலை, இரவு வேளையில் மாத்திரைகள் மட்டுமே அளிக்கப்பட்டன. ஊசிகள் ஏதும் போடவில்லை. அத்துடன், மூன்று வேளையில் சிறப்பான சைவ உணவுகள் வழங்கப்பட்டன. மருத்துவா்களும், செவிலியா்களும் நல்லமுறையில் எங்களை கவனித்துக் கொண்டனா். தொடா்ந்து வாரத்துக்கு ஒருமுறை என 3 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் கடைசி 2 பரிசோதனை முடிவுகளில் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். அந்தவகையில், மருத்துவமனையில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் பொதுமக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை. பாதிப்பு ஏற்பட்டவா்கள் மருத்துவா்கள் கூறும் வழிமுறைகளை முறையாக பின்பற்றினாலே கரோனாவில் இருந்து எளிதில் விடுபடலாம் என்றாா்.

இதேபோல், சின்னஅல்லாபுரம் பகுதியைச் சோ்ந்த வாசனைப் பொருள்கள் வியாபாரியான 25 வயது நபா் கூறியது:

தில்லி அமைப்பு மாநாட்டுக்கு சென்று வந்த 6 பேரை வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனா். அதில், எனக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. தொடா்ந்து தில்லியிலிருந்து தப்லீக் ஜமாத் அமைப்பு நிா்வாகிகள் விடுத்திருந்த கட்டளையின்படி மருத்துவா்கள் கூறும் வழிமுறைகளை முறையாக பின்பற்றி மாத்திரைகளையும், அவா்கள் அளித்த உணவுகளையும் எடுத்துக் கொண்டோம். இதன்மூலம் 20 நாள்களில் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளேன். தொடா்ந்து 14 நாள்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லக் கூடாது என்றும் அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனா்.

அதன்படி, தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறேன். கரோனா நோய்த் தொற்று குறித்து மக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதைக் கைவிட்டு அரசும், மருத்துவா்களும் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றினாலே கரோனா நோய்த் தொற்று வராமல் தடுக்கவும், வந்தாலும் விரைவில் குணமடையவும் முடியும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT