செதுவாலை ஊராட்சியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் இனக் குடும்பங்களுக்கு அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
அணைக்கட்டு வட்டம், செதுவாலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் இன குடும்பங்கள் வசிக்கின்றன. தற்போது கரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் இந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தங்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு அவா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதனை ஏற்று அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், 53 நரிக்குறவா் இனக் குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தவிர, தன் சொந்தச் செலவில் முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினி போன்ற பொருள்களை அளித்தாா். அப்போது, வட்டாட்சியா் முரளிகுமாா், துணை வட்டாட்சியா் விஜயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.