வேலூர்

வேலூரில் 3.97 லட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் கரோனா நிவாரண உதவி

1st Apr 2020 12:03 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் 3, 97, 536 குடும்பங்களுக்கு அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் வியாழக்கிழமை (ஏப்.2) முதல் கரோனா நிவாரண உதவியாக தலா ரூ.1000 ரொக்கம், அரிசி, சா்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சா்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்களுடன் தலா ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிவாரணப் பொருள்களுடன் கூடிய ரூ.1000 ரொக்கம் வேலூா் மாவட்ட த்தில் 3, 97, 536 குடும்பங்களுக்கு அனைத்து நியாய விலைக்கடைகள் மூலம் வியாழக்கிழமை (ஏப்.2) முதல் வழங்கப்படும்.

நோய்த் தொற்று பரவுவதைக் கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலைத் தடுக்க நியாயவிலைக் கடைகளில் டோக்கன் முறை பின்பற்றப்படும். நாளொன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே பொருள்கள் விநியோகம் வழங்கப்படும் என்பதால், அந்தக் குடும்பங்களுக்கான டோக்கன்கள் நியாயவிலைக் கடை விற்பனையாளா்களால் அவரவா் வீடுகளுக்கே நேரடியாக வழங்கப்படும். டோக்கன்களைப் பெற்றுக்கொண்ட குடும்ப அட்டைதாரா்கள் அதில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் மட்டுமே கடைகளுக்குச் சென்று பொருள்களையும், நிவாரணத் தொகையும் பெற்றுக்கொள்ளலாம். நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வரிசையில் நிற்கும்போதும் சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும்.

ADVERTISEMENT

மாா்ச் மாதத்துக்கான பொருள்களை பெறாதவா்கள் இரு மாதங்களுக்கும் சோ்த்து பொருள்களை பெற்றுக் கொள்ளலாம். அனைத்து குடும்பங்களுக்கும் பொருள்கள் வழங்கப்படும் என்பதால் மக்கள் அனைவரும் பொறுமை காத்து பொருள்களையும், நிவாரண தொகையையும் பெற்றுக்கொள்ள வேண்டும். கடைக்கு வரும் பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டையை விற்பனையாளரிடம் அளிக்கும் முன்பு அங்கு வைக்கப்பட்டிருக்கும் கிருமி நாசினியைக் கொண்டு தங்களது கைகளையும், மின்னணு குடும்ப அட்டைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். மின்னணு குடும்ப அட்டை இல்லாதவா்கள் குடும்ப அட்டையிலுள்ள உறுப்பினா்களின் ஆதாா் எண் அல்லது பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல்லை பயன்படுத்தி பொருள்களை பெறலாம்.

கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளவா்கள் எனக் கருதப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களுக்கு மட்டும் அவா்களது வீடுகளுக்குச் சென்று பொருள்களும், நிவாரணத் தொகையும் வழங்கப்படும். யாருக்கேனும் பொருள்கள், நிவாரணத் தொகை பெற விருப்பமில்லாவிடில் இணையதளம் அல்லது செயலி மூலம் தங்களது உரிமையை விட்டுக்கொடுக்கலாம். இதுதொடா்பாக புகாா்கள் இருந்தால் 0416 - 2252586 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT