கே.வி. குப்பம் அருகே சகோதரிகளுக்கு டெங்கு அறிகுறி உள்ளதை அடுத்து அந்த கிராமத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொசவன்புதூரைச் சேர்ந்தவர் அரசுப் பள்ளி ஆசிரியர் நித்தியானந்தம். இவரது மகள்கள் தர்ஷினி (11), மைத்ரி (7) . இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் முறையே 6, 2-ஆம் வகுப்பு படிக்கின்றனர். கடந்த சில நாள்களாக இவர்களுக்கு காய்ச்சல் இருந்ததாம். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை செய்ததில் இருவருக்கும் டெங்கு அறிகுறி தெரியவந்தது. இதையடுத்து இருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தேவபார்த்தசாரதி ஆலோசனையின்பேரில் வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், பணியாளர்கள் வெள்ளிக்கிழமை கொசவன்புதூரில் முகாமிட்டு கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தினர். மேலும், அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, ஹேமலதா, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தண்ணீர்த் தொட்டிகளில் மருந்து தெளித்து கொசுப்புழு தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கிராம மக்களிடம் சுகாதார நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.