ஆவின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்திட வேலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் ஆவின் நிறுவன உற்பத்தி பொருள்களை விற்பனை செய்து பலன்பெறும் வகையில் முகவர்களாகத் தொழில் தொடங்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களான பால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருள்களை கொள்முதல் செய்து குளிர்சாதன பெட்டிகளில் வைத்தும், இதர முறைகளில் பராமரித்தும் விற்பனை செய்திட ஏதுவாக இட வசதியினை சொந்தமாகவோ, வாடகை அடிப்படையிலோ கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம். ஆவின் நிறுவனம், கடனுதவி வழங்கும் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகம், அண்ணா சாலை, வேலூர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.