வேலூர்

ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போன நீர்வரத்து கால்வாய்கள்: ஏரிகள் நிரம்ப வழியில்லாததால் விவசாயிகள் கவலை

22nd Sep 2019 01:13 AM

ADVERTISEMENT


நீர் வரத்து கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், ஆக்கிரமிப்புகளாலும், முள்புதர்கள் மண்டி கிடப்பதாலும் பருவமழைப்பொழிந்து பாலாறு, பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்ப வழியில்லாமல் போனதால் குடிநீருக்கும், ஏரிப் பாசனத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன விவசாயமும் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, பருவ மழைக்கு முன்னதாக நீர்வரத்துக்  கால்வாய்களையும்,  நீர்நிலைகளையும் தூர் வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் பாலாறு மற்றும் பொன்னை ஆற்றுப்படுகையையொட்டியுள்ள கிராமங்களில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதானத் தொழிலாக விளங்கி வருகின்றன. 
இந்த இரண்டு ஆறுகளிலும், பருவமழைக் காலத்தின்போது  பெருக்கெடுத்து வரும் வெள்ள நீரை ஆற்றின்  கிளைக்  கால்வாய்கள்  மூலம்  ஆற்றுப்படுகையையொட்டியுள்ள  ஏரி, குளம், குட்டை, கண்மாய், தடுப்பணைகள் போன்ற நீர்நிலைகளில் தேக்கி வைத்து குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
அண்மைக்காலமாக, பருவமழைக் காலங்களில் மழைப்பொழிந்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஆற்றில் ஓடினாலும், ஆற்றில் இருந்து  நீர் நிலைகளுக்கு செல்லும் நீர்வரத்து கிளைக் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் அவற்றை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
குறிப்பாக, ஆக்கிரமிப்புகளாலும், முள்புதர்கள் மண்டியுள்ள நீர்வரத்துக் கால்வாய்களாலும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு நீர் வரத்து இல்லாமல் போகிறது. ஏறத்தாழ, பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழை வெள்ளநீர் பாய்ந்தோடியும், அவற்றை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக, நீர் வரத்து இல்லாத இந்த நீர்நிலைகள் விரைவாக வறண்டு விடுவதால், இதை நம்பியுள்ள விவசாயிகள் கடும் பாதிப்படைகின்றனர். 
ராணிப்பேட்டை வருவாய்க்கோட்டத்தில் மட்டும் 29 ஏரிகள் உள்ளன. இதில் சோளிங்கர் கால்வாய் தூர்ந்து போய், முள்புதர்கள் வளர்ந்து, ஆக்கிரமிப்பின்பிடியில் உள்ளதால் இந்த கால்வாய் நீர்வரத்தை நம்பியுள்ள இரண்டாடி, பெருங்காஞ்சி, பல்லேரி, வசூர், காவேரிப்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் முழுமையாக சென்று சேரவில்லை. இதில் காவேரிப்பாக்கம் ஏரி பெரிய பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரி நிரம்பிய பிறகு வெளியேறும் உபரிநீர் இறுதியில் சென்னையில் செம்பரம்பாக்கத்தை சென்றடையும் வகையில் இந்த கால்வாய் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்களைத் தூர்வாரி, முறையாக சீரமைத்தால் இந்த ஏரிகளுக்கு மட்டுமின்றி, சென்னை வரை வழிநெடுகிலும் உள்ள ஏரி, குளம், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகள் நிரம்பி வழியும். இதன்மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிப்படைவதுடன், குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும் என்று கூறுகின்றனர் விவசாயிகள். 
சோளிங்கர் கால்வாயைப்போல, வேலூர் மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களுக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்களும் தூர்ந்து, நீர் செல்வதற்கான வழியின்றி உள்ளன. அண்மையில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், பொன்னை ஆற்றிலும், பாலாற்றிலும் வெள்ளநீர் பொங்கி பாய்ந்த போதிலும், இந்த மழைநீர் ஏரிகளை சென்றடையாததால் இப்போதும் வறண்டு காணப்படுகிறது. ராணிப்பேட்டை அருகே பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரியான லாலாப்பேட்டை ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் அது மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.  
இதேபோல, கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களின் நீர்வரத்துக் கால்வாய்களின் நிலைமை மோசமாகவே உள்ளன.  எனவே, மழைபெய்து ஆற்றில் வெள்ளம் பாய்ந்த போதிலும், பாசனத்துக்கும், குடிநீருக்கும் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
கடந்த மாதம் வரையிலும் மாவட்டமே வறட்சியின் பிடியில் சிக்கி குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் இன்றி தவித்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், பெய்த மழை நீரை நீர்நிலைகளில் தேக்கி வைக்க முடியாமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். 
எனவே, வடகிழக்கு  பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாரி, ஏரிகளுக்கு தடையின்றி நீர்வரத்து கிடைக்கவும், நீர்நிலைகளை தூர் வாரி ஆழப்படுத்தியும், கரைகளைப் பலப்படுத்தியும், உடைந்த மதகுகளை சீரமைத்து நீர் ஆதாரங்களை பாதுகாத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சேஷாச்சல வனப்பகுதியில் பெய்த மழை நீர் அங்குள்ள கலவகுண்டா அணையில் நிரம்பியதால், உபரிநீர்  வழிந்து மழை வெள்ளமாக பொன்னை ஆற்றில்  வந்துக் கொண்டிருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 2015, 2017- ஆம் ஆண்டுகளில் 122 ஏரிகள் நிரம்பியது. இந்த ஆண்டு சுமார் 53 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் நீர்வரத்துக்கால்வாய்களை தூர்வாரும் பணி குடிமராமத்துப் பணியில் சேர்க்கப்படவில்லை. இதனால், நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
3 நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரினால்129 ஏரிகளுக்கு நீர்வரத்து 
பொன்னை ஆற்றின் குறுக்கே மேல்பாடி அருகே 1855-ஆம் ஆண்டு 216.50 மீட்டர் நீளம், 21.25 அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கும் நீர் கிழக்கு, மேற்கு, தெற்கு என 3 பிரதான கால்வாய்கள் மூலம் வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த 129 ஏரிகளுக்கு செல்வதன்மூலம் அங்குள்ள ஏரி, குளங்கள் நீர்வளம் பெறுகின்றன. இந்த தடுப்பணை மூலமாக  வேலூர் மாவட்டத்தில் மட்டும் 122 ஏரிகள் நீர்வளம் பெற்று 8,840.15 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த மூன்று நீர்வரத்து கால்வாய்களையும் தூர்வாரினால் 129 ஏரிகளுக்கு நீர்வரத்து தடையின்றி கிடைக்கும் என்பதால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT