அரக்கோணத்தில் இருந்து திருப்பதி-திருமலைக்கு பாதயாத்திரையாக ஐநூறுக்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
அரக்கோணத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றதையடுத்து, அரக்கோணம் நகரைச் சேர்ந்த பக்தர்கள் சனிக்கிழமை திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.
இதையொட்டி, சனிக்கிழமை காலை அரக்கோணம் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் தாயார் திருமஞ்சன சேவை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீபாலராமாநுஜ பாலபக்த ஜன சபையின் ஸ்ரீவெங்கடாத்திரி கான நாட்டிய பஜனாம்ருதமும், அதை தொடர்ந்து மங்கள வாத்தியம், செண்டை மேளம் முழங்க கோலாட்டமும் நடைபெற்றது. இதையொட்டி, பக்தர்கள் பஜனைப்பாட ஸ்ரீநிவாச பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
புறப்பாடு நிகழ்ச்சியில் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் அறங்காவலர் கோபண்ணாரவி, ஸ்ரீதிருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவின் தலைவர் என்.அரி, நகர திமுக துணைச் செயலர் அன்புலாரன்ஸ், அதிமுக நிர்வாகி முனுசாமி, நகர காங்கிரஸ் நிர்வாகி லவக்குமார், அரிமா சங்க நிர்வாகி ரோஸ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.