ஆம்பூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டுமென ஆம்பூரை சுற்றியுள்ள கிராம மக்களிடம் கோரிக்கை  எழுந்துள்ளது.
ஆம்பூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை


ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டுமென ஆம்பூரை சுற்றியுள்ள கிராம மக்களிடம் கோரிக்கை  எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் நகரம் புகழ்பெற்று விளங்கும் வணிக நகரமாகும். தோல் தொழிலில் பிரசித்தி பெற்று திகழ்கிறது.  தோல் மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதி வணிகத்தில் கணிசமான அளவுக்கு அந்நிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டித் தருவதில் ஆம்பூர் முக்கியம இடத்தை பெற்றுள்ளது. சென்னை - பெங்களூர் ஆறுவழி தேசிய நெடுஞ்சாலையிலும், சென்னை-பெங்களூர்-கோவை ரயில்வே மார்க்கத்திலும் உள்ள நகரமாகும்.  
ஆம்பூர் வட்ட தலைநகரமாகவும், ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியாகவும் விளங்குகிறது.
ஆம்பூர் நகரைச் சுற்றி பேர்ணாம்பட்டு, மாதனூர் ஊராட்டி ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகள்  அமைந்துள்ளது. இந்த ஊராட்சிகளில் 250-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.  அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசுப்பணியாளர்கள், தனியார் தொழிற்சாலை ஊழியர்களும் பல்வேறு பணிகள் நிமித்தமாகவும், தேவைகளுக்காகவும், அன்றாட தேவைகளுக்காகவும்  ஆம்பூர் நகருக்கு வந்து செல்கின்றனர். 
மேலும் ஆம்பூரில் வட்டாட்சியர் அலுவலகம் முதல் பல்வேறு அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. 
தற்போது மாதனூர், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பெரும்பாலான கிராம ஊராட்சி மக்களின் வங்கிகணக்குகள் ஆம்பூர் நகரத்திலுள்ள வங்கிக் கிளைகளில்தான் பராமரிக்கப்படுகிறது.  பல்வேறு அலுவல்களுக்கும் ஆம்பூர் நகரையே நாடி வரும் மக்கள் உள்ளாட்சி சார்ந்த அலுவல்களுக்காகவே பேர்ணாம்பட்டு, மாதனூரை தேடி செல்ல வேண்டியுள்ளது.   
எனவே, வளர்ந்து வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு ஊராட்சி ஒன்றியங்களின் எல்லைகளையும் மறுசீரமைக்க வேண்டும் என்றும், எல்லைகளை மறுசீரமைத்து கூடுதலாக ஊராட்சி ஒன்றியங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன்படி, ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: 
ஆம்பூரை சுற்றியுள்ள உள்ள மாதனூர் ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் சோலூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், நாயக்கனேரி, நாச்சார்குப்பம், விண்ணமங்கலம், மின்னூர், செங்கிலிகுப்பம், கன்னடிகுப்பம், சோமலாபுரம் ஆகிய 10 ஊராட்சிகளும், பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் தேவலாபுரம், துத்திப்பட்டு, பெரிவரிகம், சின்னவரிகம், அயித்தம்பட்டு, சாத்தம்பாக்கம், பெரியகொம்மேஸ்வரம், கைலாசகிரி, நரியம்பட்டு, ராஜக்கல், அழிஞ்சிகுப்பம், மிட்டாளம், வெங்கடசமுத்திரம், கரும்பூர், பார்சனாப்பள்ளி, மோதகப்பள்ளி, கதவாளம், அரங்கல்துருகம், குமாரமங்கலம், வீராங்குப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மேல்சாணாங்குப்பம், வடகரை, பாப்பனப்பல்லி, சின்னப்பள்ளிகுப்பம், வடசேரி, கொல்லகுப்பம் என 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும் அமைந்துள்ளன. 
இந்த ஊராட்சிகளை சேர்ந்த உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சிகளில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பல்வேறு திட்டங்களில் பயனடையும் பயனாளிகள், ஊராட்சி பகுதிகளுக்கு வசதிகள் வேண்டி மனு கொடுக்க செல்வோர் என பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு இரண்டு மூன்று பேருந்துகளை மாறிப் பயணிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. 
 இங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு சென்று வர ஒரு நாள் ஆகிவிடுகிறது. இந்த இரண்டு ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், ஊராட்சி மன்றங்களிலும் பணிபுரியும் பெண் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு சென்று வர படும் துயரம் சொல்லி மாளாது. பெரும்பாலானவை ஊரகப்பகுதிகள் என்பதால் குறித்த நேரத்துக்கு மட்டுமே பேருந்துகள் இயங்கும். இங்கு ஆட்டோ வசதியும் குறைவு. இந்நிலையில, வாரந்தோறும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டங்களில் ஊழியர்களும், பணியாளர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். அதுபோன்ற கூட்டங்கள் பெரும்பாலும் மாலை நேரங்களில்தான் தொடங்கும். அந்த கூட்டம் நடைபெற்று முடிய இரவு 7 அல்லது 8 மணி ஆகி விடும். கூட்டம் முடித்து வீடு திரும்பும் பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். 
மாநிலங்களை பிரிப்பது, மாவட்டங்கள் பிரிப்பது, வருவாய் வட்டங்கள், வருவாய் கோட்டங்கள் புதிதாக ஏற்படுத்துவது போல்,  பேர்ணாம்பட்டு, மாதனூர் ஒன்றியங்களின் எல்லைகளை மறுசீரமைப்பு செய்து ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஒன்றியம் ஏற்படுத்த வேண்டும் என்பது 40-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com