ஆம்பூர் நகரில் ரூ. 24.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள 110 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணியை வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
ஆம்பூர் நகரில் குற்றச் செயல்கள், விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஆம்பூர் நகர போலீஸார் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து ஆம்பூர் நகரக் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் முயற்சி மேற்கொண்டு நன்கொடையாளர்கள் மூலம் ரூ. 24.50 லட்சம் செலவில் நகரின் 35 முக்கிய பகுதிகளில் 110 சிசிடிவி கேமராக்களை பொருத்தினார்.
ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணியை வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியது: வேலூர் மாவட்டத்தில் வேலூருக்கு அடுத்தபடியாக ஆம்பூரில்தான் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நன்கொடையாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2-ஆம் கட்டமாக மேலும் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்காணிப்புப் பணி எளிதாக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் குறையும். குற்றச் செயல்கள் நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு இவை உதவியாக இருக்கும் என்றார்.
ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம், நகரக் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் எம்.மதியழகன், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் வேலூர் மண்டலத் தலைவர் சி.கிருஷ்ணன், தமுமுக மாவட்டத் தலைவர் வி.ஆர்.நசீர் அஹமத், வித்ய விஹார் பள்ளிகளின் நிறுவனர் கே.குப்புசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் எஸ்.பி. பிரவேஷ்குமார் கூறுகையில், ஆம்பூர் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலுக்காக மாறுதலில் சென்ற போக்குவரத்து போலீஸார் விரைவில் ஆம்பூருக்கு திரும்ப வந்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
போக்குவரத்து நெரிசலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காலை நேரத்தில் கனரக வாகனங்கள் நகரப் பகுதிக்குள் வருவதைக் கண்காணித்து அதற்கென நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வர அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.