உணவுப் பொருள்கள் விற்பனை செய்வோர் தங்களது உரிமங்களையும், பதிவுகளையும் புதுப்பிக்க வேண்டும் என்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
காட்பாடியில் வணிகர் சங்க ஆலோசனைக் கூட்டம், ஓட்டல்களில் தரமான உணவு விநியோகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது:
மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக 2,714 பேர் உரிமம் பெற்றுள்ளனர். 11,915 பேர் பதிவு செய்துள்ளனர். தரமான பொருள்களில் உணவு தயாரிக்க வேண்டும். உரிமங்களையும், பதிவுகளையும் புதுப்பிக்க வேண்டும். புகார் எண்ணை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றார் . கூட்டத்தில், 10 கடைகளுக்கு உரிமமும், 15 பேருக்கு பதிவுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில், உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கந்தவேல், சுரேஷ், நாகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.