வேலூர்

அனுமதியின்றி செயல்படும் டயர் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு: ஆட்சியரிடம் புகார்

17th Sep 2019 06:40 AM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டை அருகே கத்தாரிக்குப்பம் கிராமத்தில் அனுமதியின்றி செயல்படும் டயர் தொழிற்சாலையில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாக அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தலைமையில் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வாலாஜாபேட்டை அருகே கத்தாரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் அளித்த மனு விவரம்:
கத்தாரிகுப்பம் கிராமத்தில் பழைய டயர்களை எரிக்கும் தனியார் நிறுவனம் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இங்கு டயர்களை திறந்தவெளியில் போட்டு எரிப்பதால் அருகே வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அந்த தனியார் டயர் நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
வேலூரை அடுத்த கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் தனது மனைவி, மகளுடன் அளித்த மனு விவரம்:
கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் கடந்த 14-ஆம் தேதி சகுந்தலா என்பவர் விபத்தில் இறந்தார். அவரது உடலுக்கு நான் குடும்பத்துடன் சென்று அஞ்சலி செலுத்தினேன். அப்போது, எங்களை சிலர் வெளியேற்றினர். இதேபோல், கடந்த இரு மாதத்துக்கு முன்பு நடந்த காந்தம்மாளின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபோதும், எங்களை வெளியேற்றினர். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக அபாரதமும் விதித்தனர். அப்போதுதான் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதனால், எங்கள் குடும்பம் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளது. எங்களை ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மனு அளிக்க வந்த ஒருவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீது ஊற்ற முயன்றார். அப்போது, அங்கிருந்த போலீஸார் அதைத் தடுத்து வெளியே அழைத்து விசாரித்ததில், அவர் காட்பாடி வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது.
மேலும், அடகு கடையில் வேலை செய்து வரும் அவரின் வீட்டின் அருகே 2 மனைகள் உள்ளதாம். முன்விரோதம் காரணமாக அந்த மனைகளைச் சேர்ந்தவர்கள் அடியாட்கள் உதவியுடன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுதொடர்பாக, கடந்த ஆண்டு காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 12-ஆம் தேதி சிலர் அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட சீனிவாசன், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், இலவச வீட்டு மனைப் பட்டா, உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 9 பேருக்கு ரூ. 66 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 7 பேருக்கு ரூ. 1,02,160 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளும் அளிக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லூர்துசாமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT