வேலூர்

விவசாயிகள் சொட்டுநீர் பாசன முறைகளை நிர்மாணிக்க வேண்டும்: சார்-ஆட்சியர் இளம்பகவத்

13th Sep 2019 07:02 AM

ADVERTISEMENT

அனைத்து விவசாயிகளும் சொட்டுநீர்ப் பாசன முறைகளை அரசு மானியம் பெற்று நிர்மாணித்துக்கொள்ள வேண்டும்  சார்-ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார்.
அரக்கோணம் வட்டம் கீழ்குப்பம், காவனூர், கீழ்ப்பாக்கம் ஊராட்சிகளை உள்ளடக்கி கீழ்ப்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் அவர் பேசியது:
தற்போது தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த நீரில் அதிக விவசாயம் செய்ய மிகச் சிறந்த வழிமுறை சொட்டுநீர் பாசனம்தான். இதற்கு தமிழக அரசும் அதிக அளவில் மானியம் வழங்குகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் சொட்டுநீர்ப் பாசன முறைகளை அரசிடம் பெற்று நிர்மாணித்துக்கொள்ள வேண்டும்.
தற்போது முகாம்களில் மனுக்கள் தருவது குறைந்து வருகிறது. இதற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்படுவதே காரணம். அதனாலேயே இந்த முகாம்களில் அரசின் திட்டங்களை விளக்க வேண்டியது எங்கள் கடமையாக இருக்கிறது என்றார் அவர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 55 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, ரூ. 8.5 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை சார்-ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார். 
வட்டாட்சியர் ஜெயக்குமார், சமூகநலத் திட்ட தனி வட்டாட்சியர் மதிவாணன், குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை வட்டாட்சியர் மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூரை அடுத்த தோரணம்பதி அருகே உள்ள நாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு, சார்-ஆட்சியர் பி.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து, நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
வட்டாட்சியர் இரா.அனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இதில், 122 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 49 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளன.
முதியோர் உதவித் தொகை, நகல் பட்டா, சிறு, குறு விவசாயி சான்று, கம்பு, ராகி விதைகள், விசைத் தெளிப்பான் என மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 79 ஆயிரத்து 515 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் டி.ஹரிதாஸ் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT