வேலூர்

ராணிப்பேட்டையில் கேட்பாரற்றுக் கிடக்கும் நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த கற்சிலை

10th Sep 2019 08:48 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை காரை கூட்டுச் சாலை அருகே பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை முன்பு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த கற்சிலையை தொல்லியல் துறையினர் மீட்டு, அதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என  சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராணிப்பேட்டை நகரின் சுற்று வட்டாரப் பகுதிகளில்  பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த முதுமக்கள் தாழிகள், கற்சிலைகள் மண்ணில் புதையுண்டு கிடந்து பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.   
இந்நிலையில், ராணிப்பேட்டை காரை கூட்டுச்சாலை அருகே பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத்  தொட்டி வளாகத்தில் தொன்மை வாய்ந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பழங்கால கற்சிலை ஒன்று பல ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடக்கிறது. இந்த கற்சிலையை தொல்லியல் துறையினர் உடனடியாக மீட்க வேண்டும். அது என்ன சிலை என்றும், எந்த காலத்துக்குரியது என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தி பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண்ணில் புதைந்த பல நூற்றாண்டுகள் தொன்மையான பல்வேறு கற்சிலைகள் ஏற்கெனவே கிடைத்துள்ளன. 
அவை தொடர்பாக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் மேலும் பல பழைமை வாய்ந்த சிலைகளும், வரலாற்று  உண்மைகளும் தெரியவரும் என சமூக ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT