வேலூர்

தினமணி எதிரொலி: திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

10th Sep 2019 08:50 AM

ADVERTISEMENT

தினமணி செய்தி எதிரொலியாக திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை  நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினர். 
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கடும் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, தினமணியில் "ஆக்கிரமிப்புகளால் தவிக்கும் திருப்பத்தூர் பேருந்து நிலையம்' என்ற தலைப்பில் திங்கள்கிழமை விரிவான செய்தி, படத்துடன் வெளியானது.  இதையடுத்து, நகரமைப்பு அலுவலர் செ.ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளர் அ.விவேக் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தவர்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த பொருள்களை பறிமுதல் செய்தனர். 
பின்னர், அவற்றை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டு, மறுபடியும் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால்  அபராதம் விதிப்பதோடு பறிமுதல் செய்த பொருள்களை திருப்பி தரமாட்டோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
ஒருபுறம், ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதை அறிந்த நடைபாதை ஆக்கிரமிப்பாளர்கள், தாங்களாக முன்வந்து கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். 
இதன் காரணமாக, பேருந்து நிலைய கடைகளின் நடைபாதையில் பயணிகள் எளிதாக சென்று வர பாதை ஏற்பட்டது. 
எனவே, மீண்டும் நடைபாதையை ஆக்கிரமிக்காதபடி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். 
இதுகுறித்து நகரமைப்பு அலுவலர் தினமணி செய்தியாளரிடம் கூறுகையில், இன்று தினமணியில் ஆக்கிரமிப்பு குறித்த செய்தி வெளியானதையடுத்து, ஆணையர் இரா.சந்திரா அறிவுறுத்தலின்பேரில் பேருந்து நிலையத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இப்பணியில் தொடர்ந்து நான்கு நாள்கள் ஈடுபட உள்ளோம். இதனையடுத்து, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாவண்ணம் கண்காணிக்க குழு நியமிக்கப்பட உள்ளது என்றார் அவர் .

ADVERTISEMENT
ADVERTISEMENT