வேலூர்

சவுதியில் இறந்த கார் மெக்கானிக் : தவிக்கும் கர்ப்பிணி மனைவி

10th Sep 2019 08:51 AM

ADVERTISEMENT

ஆம்பூர் அருகே வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சவுதியில் இறந்து ஒரு மாதம் ஆகியும் அவரது சடலத்தை கொண்டு வர முடியாமல் அவரது கர்ப்பிணி மனைவி தவித்து வருகிறார்.
ஆம்பூர் அருகே வீரராகவபுரத்தைச் சேர்ந்த கார் மெக்கானிக் சுந்தர் (40). இவர் கடந்த 10 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், முத்துலட்சுமி என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.  
திருமணத்திற்காக விடுமுறையில் வந்தவர் திருமணம் முடிந்த பிறகு சவுதிக்குச் சென்றார். 
கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை சுந்தருடன் பணிபுரியும் நபர் முத்துலட்சுமிக்கு போன் செய்து சுந்தர் இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார். 
பணியின்போது அவருக்கு மார்பு வலி ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  
தனது கணவரின் சடலத்தை மீட்டு இந்தியாவிற்கு கொண்டுவரவும், பணியமர்த்திய நிறுவனம், மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி கடந்த ஆக. 10-ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.  
மேலும் இந்திய வெளியுறவுத்துறைக்கும் இதுகுறித்து கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.   
ஆனால் சுந்தர் இறந்து ஒரு மாதம் ஆகியும் இதுவரை அவரது சடலத்தை இந்தியாவிற்கு கொண்டு வரமுடியாத சூழ்நிலை நிலவுகிறது.  
 இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுத்து இறந்த சுந்தரின் சடலத்தை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுமென முத்துலட்சுமி, அவரது உறவினர்கள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT