வேலூர்

அரக்கோணம் மாவட்டம் அமைக்கக் கோரி மனிதச்சங்கிலி போராட்டம்

10th Sep 2019 08:47 AM

ADVERTISEMENT

அரக்கோணத்தை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கக்கோரி அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் அரக்கோணத்தில் திங்கள்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 
வேலூர் மாவட்டத்தைப் பிரிக்கும்போது அரக்கோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக இங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, கடந்த ஆக.15-ஆம் தேதி சுதந்திர தின விழா உரையின்போது, வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு புதிதாக இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக அரக்கோணம் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரி வந்த அரக்கோணம் மக்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து ஆற்காட்டில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் அரக்கோணத்தை தலைமையிடமாக அறிவிக்கக்கோரி, நூற்றுக்கணக்கான மனுக்களை அரக்கோணம் பகுதி மக்கள் சார்பிலும், பல்வேறு தன்னார்வ அமைப்புகள், வணிகர் சங்கங்கள் சார்பிலும் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலிடம் அளிக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து,  இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரக்கோணத்தில் கடந்த மாதம் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் வணிகர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் நடத்தினர்.மேலும், வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை அரக்கோணம் நகர அனைத்து வணிகர்கள் சார்பில் மனிதச்சங்கிலி அமைத்து கோரிக்கையை வலியுறுத்தினர்.  
இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் வேலூர் மாவட்டத் தலைவர் கே.எம்.தேவராஜ், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் நைனா மாசிலாமணி தலைமை தாங்கினர். வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து காந்தி ரோட்டில் நடைபெற்ற இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் மளிகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜி.எத்திராஜ், செயலர் ஜிடிஎன்.அசோகன், ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் பெ.இளங்கோ, நகை வணிகர்கள் சங்கத்தலைவர் எம்.எஸ்.மான்மல், அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் இன்பநாதன், சரவணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் கெளதம், மாநில இளைஞரணி துணைச் செயலர் ந.தமிழ்மாறன், ஒன்றியச் செயலர்கள் ச.சி.சந்தர், நரேஷ், நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலர் பாவேந்தன், நகரத் தலைவர் அசேன், தமிழ் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் மோகன், ரோட்டரிச் சங்கத்தலைவர் குணசீலன், அரிமா சங்கத் தலைவர் வெங்கடநரசிம்மன் உள்ளிட்ட பலர் மனிதச்சசங்கிலியில் பங்கேற்றனர். 
முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT